Pages

Tuesday, March 30, 2021

பயணம்

பொதுவாக சுற்றுலா போகும் சமூகங்களுக்கு மத்தியில் இலங்கைத் தமிழர்களின் உயிர்தப்பும் பயணங்கள் சாகசங்கள் நிறைந்தவை. விடுமுறைக்கு வரும் புலம்பெயர் தழிழ் உறவுகளின் அலப்பறை சிலருக்கு எரிச்சலூட்டினாலும் அவர்கள் அவ்வூர்களுக்கு சென்றடைவதற்கு ஆரம்பித்த பயணங்கள் தற்போழுது கேட்பதற்கு சாகசப்பயணங்களாக தோன்றினாலும் அவை உண்மையிலேயே வாழ்வா சாவா பயணங்கள். அப்படிப் பயணித்த ஒருவரின் அனுபவத்தை ஆவனப்படுத்தும் சிறிய முயற்சி. 

Tuesday, August 14, 2012

விடியல்

ஆகஸ்ட் 13, இன்றையவிடியல் பஜனைனையுடனேயே விடிந்தது. விடியல் என்பது அதிகாலை மணி 5 எல்லாம் இல்லை. குத்துமதிப்பா மத்தியானம் 2 மணி இருக்கும். என்போன்ற நைற் சிப்ற் போறவர்களுக்கு அதுதான் விடியும் நேரம். அதற்குப் பின்னர் கூட இருக்கலாம். பஜனையும் சற்று வித்தியாசமானது தான். எனது ரூம் மேற் தனது மனைவியை நோக்கித்தான் இம்மை வறுமை இல்லாமல் பஜனை பண்ணிகிட்டிருந்தார். ஒரே ரூம்லயே இன்னோருத்தன் முன்னாடி அப்படி எல்லாம் இல்லை, ஸ்கைப்ல தான் இந்தக்கூத்து. என்னை நான் ஆசுவாசப்படுத்திக்கொண்ட விடயம் என்னவென்றால் அவர் சகோதர மொழிக்காரர். ஆனாலும் நாம் தான் பிறமொழியானாலும் கெட்டவார்த்தைகளில் கொஞ்சம் தேர்ச்சி பெற்று விடுவதால் அவரது பஜனை எனக்கும் விளங்கியது. நாய், பேயில் தொடங்கி தமிழில் ரான்சிலேற் பண்ண முடியாதளவுக்கு எல்லா கெட்டவார்த்தைகளையும் பாவிச்சுட்டாரு மனுசன். வடிவேலு தண்ணிஅடிக்கிறதுக்காக திட்டச்சொல்லுவாருல்ல அந்த மாதிரி. பாவம் அந்தச் சகோதரி, அவர்களிற்குள் என்ன பிரச்சனையோ, அனாலும் இது ரெம்ப ஓவர். நானும் தான் எவ்வளவு நேரந்தான் தூங்கிறமாதிரியே படுத்திருக்கிறது. அது போக என்னதான் அவருடைய குடும்பப்பிரச்சனை என்றாலும் அவரை நாம் பார்க்கும் பார்வையில் நிச்சயம் மாற்றத்தைக் ஏற்படுத்தும். அந்தப் பெண் இவர் பேசுவதைக் கேட்டுக்கொண்டிருந்ததா அல்லது மியூற் பண்ணீட்டு தலையத்தலைய ஆட்டிகிட்டிருந்ததா என்பது ஆண்டவனுக்கே வெளிச்சம். பெரும்பாலும் நாம் முடிந்து போன விடயங்களிற்காகவே அதிகம் சண்டை போடுகின்றோம். தவறுகளை மன்னித்து இனிமேல் என்ன தீர்வென்பதை நம் மனம் சிந்திக்க மறுக்கிறது. மனைவி பிள்ளைகளாக இருந்தாலும் பழிவாங்கவோ தண்டிக்கவோ துடிக்கிறது. இதனாலேயே குடும்பங்களிற்குள் எத்தனையோ சண்டைகள், பிரிவுகள்.... வீட்டிற்கு வீடு வாசல்படிதான்.......

Monday, July 2, 2012

உதயனின் போக்கு பிழைக்குதே!!!!!

யாழ் குடாநாட்டின் முன்னனி நாளிதல்களில் ஒன்றான உதயன் நாளிதல் குடா நாட்டிற்கு பல இக்கட்டான சந்தர்ப்பங்களில் இராணுவக்கெடுபிடிகளிற்கு மத்தியில் மக்களிற்கு சேவை செய்து வந்துள்ளது. இன்னும் ஏன் செய்துகொண்டுதான் இருக்கின்றது. அதற்கு நன்றிக்கடனாகவோ என்னவோ மக்கள் அதன் உரிமையாளரை பாரளுமன்றுக்கெல்லாம் அனுப்பியிருக்கிறார்கள். ஆனால் அன்மைக்காலங்களில் அதன் செயற்பாடு மற்றும் செய்திகளில் உள்ள நம்பகத்தன்மை கேள்விக்குறியாகவே உள்ளது.  உதாரணத்திற்கு யாழ்குடாநாட்டில் கடந்த வாரங்களாக முக்கிய செய்தியாக காணப்பட்ட போதனா வைத்தியசாலைப் பிரச்சனையில் உதயன் அவசரக்குடுக்கையாக குடாநாட்டின் பொது நலன் கருதாது செய்திகளை வெளியிட்டிருந்தது என்றே தோன்றுகின்றது. செய்திகளை ஆராயாது கிடைக்கும் செய்திகளை அப்படியே பிரசுரிக்கப்பட்டிருந்ததாகவே தோன்றியது. இதில் யார் முதலில் செய்தி தருகிறார்கள் என்ற ரீதியில் மற்றப்பத்திரிகைகளுக்கு வியாபாரப்போட்டியாகவே செய்திகள் பிரசுரிக்கப்படுகிறது என்றே தோன்றுகிறது. முன்னர் எதிர்க்கடைகள் இல்லாததால் பொதுநலத்துடனும் , இப்பொழுது பல எதிர்கடைகள் உள்ளதல் வியாபார நலத்துடனும் செயற்படுகிறார்களோ தெரியாது. ஆனாலும் பத்திரிகை தர்மம் ஒன்று உள்ளதல்லவா? 

மேற்குறிப்பிட்ட வைத்தியசாலை மற்றும் வைத்தியர்கள் சம்பந்தப்பட்ட செய்திகளை தான்தோன்றித்தனமாக வெளியிட்டதால் நேர்மையான பல வைத்தியர்களின் பெயர்களும் நாறடிக்கப்பட்டிருக்கிறது. அதற்கு அவர்கள் ஆயிரம் நியாயம் கற்பிக்கலாம். அதற்குமுன் பத்திரிகையாளனின் குடும்பத்தைப்பற்றியோ அல்லது பத்திரிகையாளர்களைப்பற்றியோ ஒரு தவறான செய்தி வந்தால் அவர்கள் எப்படி உணர்வார்கள் என்று நினைத்துப்பார்க்கவேண்டும். ஏனெனில் எமது சமுதாயம் அப்படிப்பட்டது. இல்லாததையே இருக்கென்று சொல்லும் சமுதாயம் இருக்கென்று சொல்லிவிட்டால் என்ன ஆகும். உன்மையிலேயெ உதயனின் செய்திகளால் பல வைத்தியர்கள் மனதளவில் மிகவும் பாதிகப்பட்டிருக்கிறார்கள். தாங்களின் நேர்மைக்குக் கிடைத்த கைம்மாறாகப் பார்க்கிறார்கள்(தவறு செய்தவர்கள் தண்டிக்கப்படத்தான் வேண்டும், அதற்காக நல்லவர்கள் பாதிக்கப்படக்கூடாது அல்லவா?) மாற்றலாகிப்போகலாமா என்று கூட யோசிக்கிறார்கள். பொது விடுமுறை நாட்களில் சுற்றுலாவுக்கு போகும் சகோதர மொழி வைத்தியர்களிற்குமத்தியில் (அது அவர்களின் சுதந்திரம்) விடுமுறை நாட்களிலுமே சேவைசெய்யும் பிரபல வைத்திய நிபுணர்கள் பலரை யாழ் போதனா வைத்தியசாலையில் காணலாம். அவர்கள் தாமாக மாற்றலானார்களானால் உதயனும் ஒரு முக்கிய காரணியாகும். 

இதேபோல் இன்னொரு செய்தி ஒரு பெண்ணைப்பற்றியது. அப்பெண் வயிற்றில் உள்ள கட்டியினால் இறந்ததற்கு(சங்காணையைச் சேர்த்தவர் என்று நினைக்கிறேன்) சட்டவிரோதமாக கருக்கலைப்புச்செய்ய முயன்றபோது இறந்ததாக எழுதியிருந்தார்கள். அடுத்த நாள் செய்தியைமாற்றிப் போட்டவர்கள் என்று நினைக்கிறேன் (மாற்றித்தான் போட்டிருந்தார்கள், குடும்பத்தாரிடம் மன்னிப்புக்கேட்டதாக பார்த்த‌ ஞாபகம் இல்லை). ஆனால், செருப்பால் அடித்துவிட்டு மன்னிப்பு கேட்பதென்பது ஏற்கமுடியாத ஒரு செயற்பாடு. அந்த குடும்பத்தின் நிலையை சற்று நினைத்துப்பார்க்க வேண்டாமா?. உதயனில் அடிக்கடி இது போன்ற தான்தோன்றித்தனங்கள் அதிகம் பார்க்கக்கூடியதாகவே உள்ளது. இது அவர்களின் தலைக்கனமாக கூட இருக்கலாம். ஏனெனில் நீதிமன்றமும் சில செய்தி தொடர்பாக செய்தி ஆசிரியரை மன்றில் மன்னிப்புக் கேட்கும்படி அறிவுறித்தியிருந்தது. ஆனால் ஒன்றுமட்டும் உண்மை. அதிக தலைக்கனம் நீண்ட நாள் நிலைப்பதில்லை. இது வரலாற்றில் நாம் கண்ட உண்மை. 

Friday, June 15, 2012

இரப்போரா நீங்கள்?

யாழ் குடாநாட்டு பல்பொருள் அங்காடிகள், உணவகங்கள் மற்றும் இதர விற்பனை நிலையங்களில் வேலை செய்வோர் மற்றும் உரிமையாளர்கள் சில விடயங்களை திருத்தவேமாட்டேன் என்று அடம் பிடிக்கிறார்கள். அவர்கள் திருத்துவதற்குப் பல இருந்தாலும், வாடிக்கையாளர்களாகிய எம்மை பாதிக்கும் அல்லது கடுப்பேத்தும் விடயமும் உள்ளாதால் தான் நான் எனது உள்ளக்கிடக்கைகளை கொட்ட இடமில்லாமல் இங்கு கொட்ட வேண்டியதாய் போய்விட்டது. வேறோன்றுமில்லை. வாடிக்கையாளர் சேவையைத்தான் சொல்கிறேன்.
நீங்கள் யாரும் இதனை அனுபவித்தீர்களோ தெரியாது, ஆனால் நான் அனுபவித்ததனால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஒரு பொருள் வாங்க கடைக்குப் போகின்றோம். பொருள் வாங்கியாச்சு. காசு கொடுக்கப்படுகிறது. மீதி பெறப்படுகிறது. வேலை முடிந்துவிட்டது.  சரி, காசு எப்படிக்கொடுத்தீர்கள்? அனேகமாக கையில் கொடுத்திருப்பீர்கள். மீதி எப்படி வாங்கினீர்கள்? மேசையில் வைக்கப்பட்டிருக்கும். எடுத்துக்கொண்டு போகவேண்டியது தான். அதுதான் மீதியைக் கொடுத்துவிட்டார்களே, கையில் கொடுத்தால் என்ன? மேசையில் வைத்தால் என்ன? என்கின்றீர்களா? அப்படியானால் வாடிக்கையாளர்களாகிய நீங்கள் பிச்சையா எடுக்கிறீர்கள்? வாடிக்கையாளர்களுக்கு என்று சில உரிமைகள் உள்ளது.  அவை கிடைக்காவிட்டால் கேட்டுப்பெறவேண்டும். கேட்டும் கிடைக்காவிட்டால் போராடிப்பெற்றுக்கொள்ளுங்கள். வன்முறையால் அல்ல, அகிம்சையால். வன்முறை எதற்கும் தீர்வாகாது, இது பட்டறிவு. நான் மேற்கூறிய உதாரணம் இலகுவாக விளங்குவதற்காகவே. ஆனால் எல்லா இடங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு அல்லது சேவை பெறுனர்களுக்கு சில பல உரிமைகள் உள்ளன. அவை கடைகள் மட்டுமல்ல, அரசாங்கத்திணைக்களங்கள், அரச மற்றும் தனியார் வைத்தியசாலைகள், போக்குவரத்து சேவைகள் என்று இந்தப்பட்டியல் நீண்டு கொண்டே போகும். இலங்கை மக்களாகிய நாம் எல்லாவற்றையும் சகித்து அனுசரித்துப் பழகாமல் அவற்றிலிருந்தும் சற்று வெளிவருவோமாக!!!.

Tuesday, May 22, 2012

நான் பயன்பெற்ற‌ இணையத்தளங்கள் - 1

www.aerochapter.com - இத்தளம் விமானப்பராமரிப்பு தொழில்நுட்பவியலாளர்கள் (Aircraft Maintenance Engineers), விமானத்தொழில்நுட்பவியலாளர்கள் (Aeronautical Engineers) மற்றும் வானோடிகள் (Pilots) போன்றவர்களும் அத்துறை சாந்தவர்களும் பல வழிகளில் பயன்பெறும் வகையில் பல தகவல்களை இலவசமாக வழங்குகிறது. முக்கியமாக அத்துறை சார்ந்த மாணவர்கள் மற்றும் எந்திரவியலாளர்கள் தோற்ற இருக்கும் சர்வதேசப் பரீட்சைகளுக்கான பயிற்சி வினாக்கள் விடைகளுடன் இலவசமாக கொட்டிக்கிடக்கின்றது. அதுமட்டும் இல்லாமல் உலகநாடுகளில் உள்ள விமானம் சம்பந்தமான படிப்புகள் மற்றும் பயிற்சிகள் வழங்கக்கூடிய கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் போன்றவற்றின் இணைப்புக்கள் மற்றும்............. wait wait.... எல்லாவற்றையும் நானே சொன்னா எப்பிடி.... நீங்களும் ஒருமுறை போய்த்தான் பாருங்களேன்.

Thursday, May 10, 2012

வாழை இலை

யாழ் மாநகரசபை எல்லையினுள் பொலித்தீன் பாவனை தடை செய்யப்பட்டுள்ளதாக பத்திரிகையில் செய்தி பார்த்த ஞாபகம். அதன் பின்பு மாநகர சபை எல்லையினுள் ஒரு அறிவிப்புப் பலகையிலும் பார்த்திருக்கிறேன். விடயம் அதுவல்ல. யாழ் மாநகரசபை மட்டுமல்ல யாழ் குடாநாடு முழுவதுமே பொலித்தீன் பாவனை அமோகமாக நடைபெருகின்றது. அதிலும் Lunch Sheet பாவனை தவிர்க்கமுடியாததாகிவிட்டது. குடாநாட்டைப் பொறுத்தமட்டில் வாழைச்செய்கை சிறந்த முறையில் நடைபெற்றுவரும் நிலையில் Lunch Sheet க்குப்பதிலாக வாழை இலையை உபயோகித்தால் சூழலும் பாதுகாக்கப்படும் அதே சமயம் தற்பொழுது மீளக்குடியமர்ந்துவரும் மக்களுக்கும் இது ஒரு வாய்ப்பாக அமையும். ஏனெனில் மீள்குடியமரும் மக்கள் வாழைச் செய்கையிலும் ஈடுபட்டுக்கொண்டிருக்கின்றார்கள். இது பற்றி எமது மாநகரசபை முதல்வர் மற்றும் குடாநாட்டு மக்களின் நலனில் அக்கறை உள்ள அரசியல்வாதிகள் சிந்தித்து உதவுவார்களா? அத்துடன் பொதுமக்களும் வாழை இலையில் சாப்பிடுவதை ஊக்குவிக்க வேண்டும். வாழைத்தோட்டம் வைத்துக்கொண்டு Lunch Sheet இல் சாப்பிட்டால் பாதிக்கப்படப்போவது அவர்கள் மட்டுமல்ல எதிர்காலச்சந்ததியினருமே. ஏனெனில் Lunch Sheet சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய ஒன்று.

Monday, April 16, 2012

வெளிநாட்டு மோகம்

இன்றய நாட்களில் குடாநாட்டு பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் என்னுள் சில ஆச்சரியக்குறிகளை உருவாக்கியது. அந்தளவிற்கு சில விளம்பரங்கள் அமைந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுக்கு குடிபெயர்தல் சம்பந்தமானவையாகவே உள்ளது. அதாவது யாழ் குடாநாட்டு மக்களின் மனநிலையினை வியாபாரிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். வேறொன்றும் இல்லை  வெளிநாட்டு மோகம் தான். பெரும்பாலான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒருவகையில் வெளிநாட்டிற்குப் போகவேண்டும் என்ற மன நிலையிலேயே அல்லது ஆசையிலேயே உள்ளனர். முன்னொரு காலத்தில் நாட்டை விட்டு வெளியெற வேண்டிய தேவை சிலருக்கு இருந்ததனால் வெளிநாட்டிற்க்குப் போனார்கள். அந்தத்தேவை சிலருக்கு உயிர் அச்சம் சார்ந்து கட்டாயமானதாகவும் சிலருக்குப் பொருளாதாரத் தேவைக்காகவும் இருந்தது(அச்சமயத்தில் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது). ஆனால் அதே மோகத்துடனும் ஆசையுடனும் எப்பொழுதுமேவா இருக்க வேண்டும். காலத்திற்கேற்ப மாற வேண்டாமா? இப்படியான ஆசைகளுடன் அலையும் சிலருக்காக எனக்குத்தெரிந்த சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என சில தகவல்கள்.

அவற்றில் வெளிநாட்டில் உயர்கல்வி என்று வரும் விளம்ப‌ரங்களை நம்பி வாழ்க்கையை தொலைப்பவர்கள் கணிசமானவர்கள் அடங்கியுள்ளனர். இப்பொழுது இலண்டன், நியுசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தான் அதிக கிறாக்கி. இதை நான் சொல்லவில்லை, விளம்பரங்கள் சொல்கின்ற‌ன. ஆங்காங்கே சில மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிற்கான விளம்பரங்களையும் காண கூடியதாக இருக்கிறது. இந்த மாதிரி விளம்பரங்கள் எல்லாமே ஏமாற்று விளம்பரங்கள் என்று சொல்லவில்லை. வியாபாரதந்திரம் என்று கூறி சிலபல உண்மைகளை கூறாமல் மறைக்கின்றார்கள். அதனை எம்மவர்களும் ஆராயாமல் ஏமார்ந்து விடுகிறார்கள். நான் சொல்ல வந்த விடயம் என்னவெனில் இது போன்ற விளம்பரங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கை என்பவற்றில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது.

பெரும்பாலான நாடுகளில் வேலை செய்துகொன்டு படிப்பது மிகக் கடினம் (உண்மையிலேயே படிக்கவென்று போகின்றவர்களுக்கு, படிக்கும் விசாவில் போய் வேலை செய்யும் எண்ணம் இருந்தால் நான் பொறுப்பல்ல). படிக்கலாம், பாஸ்பண்ணலாம், பட்டம் வாங்கலாம், ஆனால் படித்துமுடிய வேலைக்குப்போகும் பொழுது தான் தெரியும் நாம் படித்த இலச்சணம். படித்துக்கொண்டு வேலை செய்யக்கூடிய நாடுகள் எனில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகியவற்றைக்கூறலாம். ஆனால் அந்த வேலையை மட்டும் நம்பி படிக்கப்போக முடியாது. அதுவும் இப்பொழுது அந்த நாட்டவர்க்கே வேலையில்லாப்பிரச்சனை உள்ளபொழுது ரெம்பவெ கடினம். சிங்கப்பூர் மற்றும் மலேசியா படித்துக்கொண்டு வேலை செய்வதற்கு ஏற்ற நாடே அல்ல. ஆனால் பெரும்பாலான விளம்பரங்களில் வேலை செய்ய முடியும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். எனக்குத்தெரிந்தவரை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படித்துக்கொண்டு வேலை செய்ய முடியாது. ஆனால் சிங்கப்பூரில் பொலிரெக்னிக் எனப்படும் கல்லூரிகளில் படித்தால் வேலை செய்யலாம். ஆனால் வேலை செய்யும் பணம் எமது அன்றாட செலவுகளை கவனிக்க மட்டுமே போதுமானது. ஆனால் பல முகவர்கள் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் கல்லூரி/பல்கலைக்கழகக் கட்டணங்களைச் செலுத்திய பின் வீட்டிற்கும் பணம் அனுப்பமுடியும் என்றவாறாக விளம்பரப்படுத்துகிறார்கள்(Scholarship கிடைத்துப் போகின்றவர்கள் வேறு வகை).

இன்னொரு விடயம் என்னவெனில், வெளிநாட்டில் உள்ள சில கல்லூரிகள் அந்நாட்டில் உள்ள பெரிய கட்டடங்களில் இரண்டு அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்து கல்லூரி நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆனால் விள‌ம்பரத்தைப்பார்த்தால் அவர்கள் இருக்கும் முழுக்கட்டடமுமே அவர்கள‌து என்பது போல் விளம்பரம் செய்வார்கள். உண்மையிலேயே படிக்கவென்று வெளிநாட்டுக்குப் போகின்றவர்கள் இது போன்ற விடயங்களை நன்கு ஆராய்ந்து போவது நல்லது. அதுவும் இப்பொழுது கல்லூரி இணையத்தளங்கள் மூலமாக நேரடியாகவே கல்லூரி அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அந்நாடுகளின் கல்வி அமைச்சின் இணையத்த‌ளங்களில் பெரும்பாலான கல்லூரிகள் தரப்படுத்தப்பட்டிருக்கும். அதுவும் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதானால் அதிக கெடுபிடிகளைச்சந்தித்துத்தான் மாணவர்களை அனுமதிக்கும் அனுமதியைப்பெறுவார்கள். இவ்விடயத்தில் இணையமும் சிறந்த பங்களிப்பினை வழங்குவதனால் முதலில் ஆராயுங்கள்.

ஆகவே  வெளிநாட்டு மோகத்தில் முகவர்களின் மூளைச்சலவைக்குள் அகப்பட்டு பணம் கொடுத்து ஏமாறாமல் எதையும் தீர விசாரித்து செய்வது எல்லாவற்றுக்குமே நல்லது.