Pages

Monday, April 16, 2012

வெளிநாட்டு மோகம்

இன்றய நாட்களில் குடாநாட்டு பத்திரிகைகளில் வரும் விளம்பரங்கள் என்னுள் சில ஆச்சரியக்குறிகளை உருவாக்கியது. அந்தளவிற்கு சில விளம்பரங்கள் அமைந்திருந்தன. அவற்றில் பெரும்பாலானவை வெளிநாட்டு வேலைவாய்ப்பு, வெளிநாட்டில் உயர்கல்வி மற்றும் வெளிநாட்டுக்கு குடிபெயர்தல் சம்பந்தமானவையாகவே உள்ளது. அதாவது யாழ் குடாநாட்டு மக்களின் மனநிலையினை வியாபாரிகள் நன்றாகவே தெரிந்து வைத்திருக்கிறார்கள். வேறொன்றும் இல்லை  வெளிநாட்டு மோகம் தான். பெரும்பாலான சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஏதோ ஒருவகையில் வெளிநாட்டிற்குப் போகவேண்டும் என்ற மன நிலையிலேயே அல்லது ஆசையிலேயே உள்ளனர். முன்னொரு காலத்தில் நாட்டை விட்டு வெளியெற வேண்டிய தேவை சிலருக்கு இருந்ததனால் வெளிநாட்டிற்க்குப் போனார்கள். அந்தத்தேவை சிலருக்கு உயிர் அச்சம் சார்ந்து கட்டாயமானதாகவும் சிலருக்குப் பொருளாதாரத் தேவைக்காகவும் இருந்தது(அச்சமயத்தில் உள்நாட்டில் வேலை வாய்ப்புகள் குறைவாகவே இருந்தது). ஆனால் அதே மோகத்துடனும் ஆசையுடனும் எப்பொழுதுமேவா இருக்க வேண்டும். காலத்திற்கேற்ப மாற வேண்டாமா? இப்படியான ஆசைகளுடன் அலையும் சிலருக்காக எனக்குத்தெரிந்த சிலவற்றை பகிர்ந்து கொள்ளலாம் என சில தகவல்கள்.

அவற்றில் வெளிநாட்டில் உயர்கல்வி என்று வரும் விளம்ப‌ரங்களை நம்பி வாழ்க்கையை தொலைப்பவர்கள் கணிசமானவர்கள் அடங்கியுள்ளனர். இப்பொழுது இலண்டன், நியுசிலாந்து, அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு தான் அதிக கிறாக்கி. இதை நான் சொல்லவில்லை, விளம்பரங்கள் சொல்கின்ற‌ன. ஆங்காங்கே சில மலேசியா மற்றும் சிங்கப்பூர் போன்ற நாடுகளிற்கான விளம்பரங்களையும் காண கூடியதாக இருக்கிறது. இந்த மாதிரி விளம்பரங்கள் எல்லாமே ஏமாற்று விளம்பரங்கள் என்று சொல்லவில்லை. வியாபாரதந்திரம் என்று கூறி சிலபல உண்மைகளை கூறாமல் மறைக்கின்றார்கள். அதனை எம்மவர்களும் ஆராயாமல் ஏமார்ந்து விடுகிறார்கள். நான் சொல்ல வந்த விடயம் என்னவெனில் இது போன்ற விளம்பரங்கள் மற்றும் வெளிநாட்டு வாழ்க்கை என்பவற்றில் உள்ள உண்மைத்தன்மை என்ன என்பது.

பெரும்பாலான நாடுகளில் வேலை செய்துகொன்டு படிப்பது மிகக் கடினம் (உண்மையிலேயே படிக்கவென்று போகின்றவர்களுக்கு, படிக்கும் விசாவில் போய் வேலை செய்யும் எண்ணம் இருந்தால் நான் பொறுப்பல்ல). படிக்கலாம், பாஸ்பண்ணலாம், பட்டம் வாங்கலாம், ஆனால் படித்துமுடிய வேலைக்குப்போகும் பொழுது தான் தெரியும் நாம் படித்த இலச்சணம். படித்துக்கொண்டு வேலை செய்யக்கூடிய நாடுகள் எனில் இங்கிலாந்து, அவுஸ்திரேலியா மற்றும் நியுசிலாந்து ஆகியவற்றைக்கூறலாம். ஆனால் அந்த வேலையை மட்டும் நம்பி படிக்கப்போக முடியாது. அதுவும் இப்பொழுது அந்த நாட்டவர்க்கே வேலையில்லாப்பிரச்சனை உள்ளபொழுது ரெம்பவெ கடினம். சிங்கப்பூர் மற்றும் மலேசியா படித்துக்கொண்டு வேலை செய்வதற்கு ஏற்ற நாடே அல்ல. ஆனால் பெரும்பாலான விளம்பரங்களில் வேலை செய்ய முடியும் என்று விளம்பரப்படுத்துகிறார்கள். எனக்குத்தெரிந்தவரை சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் படித்துக்கொண்டு வேலை செய்ய முடியாது. ஆனால் சிங்கப்பூரில் பொலிரெக்னிக் எனப்படும் கல்லூரிகளில் படித்தால் வேலை செய்யலாம். ஆனால் வேலை செய்யும் பணம் எமது அன்றாட செலவுகளை கவனிக்க மட்டுமே போதுமானது. ஆனால் பல முகவர்கள் வேலை செய்து கிடைக்கும் பணத்தில் கல்லூரி/பல்கலைக்கழகக் கட்டணங்களைச் செலுத்திய பின் வீட்டிற்கும் பணம் அனுப்பமுடியும் என்றவாறாக விளம்பரப்படுத்துகிறார்கள்(Scholarship கிடைத்துப் போகின்றவர்கள் வேறு வகை).

இன்னொரு விடயம் என்னவெனில், வெளிநாட்டில் உள்ள சில கல்லூரிகள் அந்நாட்டில் உள்ள பெரிய கட்டடங்களில் இரண்டு அல்லது மூன்று அறைகளை வாடகைக்கு எடுத்து கல்லூரி நடத்திக்கொண்டிருப்பார்கள். ஆனால் விள‌ம்பரத்தைப்பார்த்தால் அவர்கள் இருக்கும் முழுக்கட்டடமுமே அவர்கள‌து என்பது போல் விளம்பரம் செய்வார்கள். உண்மையிலேயே படிக்கவென்று வெளிநாட்டுக்குப் போகின்றவர்கள் இது போன்ற விடயங்களை நன்கு ஆராய்ந்து போவது நல்லது. அதுவும் இப்பொழுது கல்லூரி இணையத்தளங்கள் மூலமாக நேரடியாகவே கல்லூரி அனுமதிகளைப் பெற்றுக்கொள்ள முடியும். அத்துடன் அந்நாடுகளின் கல்வி அமைச்சின் இணையத்த‌ளங்களில் பெரும்பாலான கல்லூரிகள் தரப்படுத்தப்பட்டிருக்கும். அதுவும் வெளிநாட்டு மாணவர்களை அனுமதிப்பதானால் அதிக கெடுபிடிகளைச்சந்தித்துத்தான் மாணவர்களை அனுமதிக்கும் அனுமதியைப்பெறுவார்கள். இவ்விடயத்தில் இணையமும் சிறந்த பங்களிப்பினை வழங்குவதனால் முதலில் ஆராயுங்கள்.

ஆகவே  வெளிநாட்டு மோகத்தில் முகவர்களின் மூளைச்சலவைக்குள் அகப்பட்டு பணம் கொடுத்து ஏமாறாமல் எதையும் தீர விசாரித்து செய்வது எல்லாவற்றுக்குமே நல்லது.

No comments:

Post a Comment